ஆயிரம் முறை வீழ்ந்தாலும்* *மீண்டு எழு..!!*- பால.ரமேஷ்




*சிந்தனை கதை....*

*
குருவிடம் வந்து சேர்ந்த புதிதில் சிஷ்யனுக்கு ஒரு பிரச்னை இருந்தது. எந்த ஒரு முக்கியமான பணியைச் செய்தாலும் முதல் முயற்சியிலேயே அதில் முழுமையான வெற்றி அவனுக்குக் கிடைப்பதில்லை.

அதை குருநாதர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், சிஷ்யனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எப்படி அந்தச் சிக்கலில் இருந்து மீள்வது என ஒவ்வொரு முறையும் கவலையோடு தான் பணிகளை ஆரம்பிப்பான். பதட்டம் பற்றிக் கொள்ளும்.
பதறினால் சிதறத் தானே செய்யும். ஒருமுறை கூட முதல் முயற்சியிலேயே வெற்றியைச் சுவைத்ததில்லை அவன்.

ஒருசில நாட்கள் அவனைக் கவனித்து வந்த குரு, ஒருநாள் அவனை அழைத்துப் பேசினார்.

‘‘கிளி ஜோதிடர்களின் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கிளிகள் சீட்டை எடுக்க வெளியே வந்தாலும், அவை தன் சிறகை விரித்துப் பறக்க முயற்சிப்பதில்லை. மனிதர்களைப் போல நடந்து தான் வெளியே வருகின்றன. திரும்பவும் நடந்தே கூண்டுக்குள் செல்கின்றன. இது எதனால் என்று தெரியுமா?’’ என்று கேட்டார் குரு. 
ஓரிரு நொடிகள் யோசித்து விட்டு, ‘‘தெரியவில்லை குருவே’’ என்றான் சிஷ்யன்.

குரு பேசலானார்.. ‘‘சுதந்திரமாகப் பறந்து திரியும் கிளியைப் பிடித்தவுடன் முதலில் அதன் சிறகுகளை வெட்டியெடுத்து விடுவார்கள். சிறகிழந்த கிளியானது அதை உணராமல் பறக்க முயற்சிக்கும். ஆனால், அதனால் இயலாது. தனக்கு இறகுகள் இல்லை என்று கிளிக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் பறக்க முயற்சிக்கும். ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகும்..’’. கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் சிஷ்யன்.

‘‘வெட்டப்பட்ட சிறகுகள் மறுபடியும் நாளடைவில் வளர்ந்து விடும். கிளியால் அப்போது பறக்க முடியும். ஆனால் அது பறக்க முயற்சிப்பதில்லை! தான் ஒவ்வொரு முறையும் பறக்க முயன்று அது பலிக்காததால், தனக்கு இப்போது பறக்கும் சக்தி இல்லை என்று அது தவறாக நம்பிக் கொள்ளும். சிறகை விரித்துப் பறக்கும் பழக்கத்தையே மறந்து போய் விடும்..’’.

குருவின் வார்த்தைகளைக் கேட்கக் கேட்க கிளிக்கும் தனக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பது அரைகுறையாகப் புரிந்தது சிஷ்யனுக்கு. முழுமையாகப் புரியச் செய்தார் குரு. 

‘‘எத்தனை முறை முயற்சி செய்கிறோம் என்பது முக்கியமல்ல. எத்தனை முறை தோல்வியடைகிறோம் என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் அடுத்த முறை வெற்றி கிடைக்கும் என நம்புவதும், அதே நம்பிக்கையுடன் விடாமுயற்சியைத் தொடர்வதும் தான் முக்கியமாகும். 

இத்தனை தடவைகள் தோற்றுப் போனோமே என்ற கவலையை மனதுக்குள் கொண்டு சென்றால், அதனால் பதட்டமே ஏற்படும். அடுத்த முயற்சியும் தோல்வியாக முடியவே வாய்ப்புகள் அதிகமாகும். வெற்றியைச் சந்திக்க வாய்ப்பு இருந்தும், நம்பிக்கை இன்மையால் முழு அளவில் முயற்சி செய்யாமல் தோற்றுப் போவோம்..’’ என்றார் குரு.

அதன் பின்னர் தோல்விகளைப் பொருட்படுத்தும் பழக்கம் தொலைந்து போனது சிஷ்யனிடம். என்ன ஆச்சர்யம்... முதல் முயற்சிகளிலேயே வெற்றிகள் அவனைத் தேடி வந்தன.