Ticker

6/recent/ticker-posts

ஒருவரைப் பழிவாங்க வாழ்க்கையில் வெற்றி பெறுவதுதான் சிறந்த வழி. தினம் ஒரு குட்டிக்கதை பால.ரமேஷ்


அந்தச் சிறுவன் ஒரு கிராமத்தில் வசிப்பவன். வீட்டில் அப்பா சரியில்லை... குடிகாரர். உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். சொல்ல வேண்டுமா... சிரமமான வாழ்க்கை. அம்மா, கூலி வேலைக்குப் போவார். வயல் வேலை, வீட்டு வேலை, ரோடு போடுவது, கட்டட வேலை... கிடைத்த வேலைக்கெல்லாம் போவார். சில நாள்கள் வேலையிருக்கும்; பல நாள்களுக்கு வேலையிருக்காது. என்னதான் சம உரிமை பேசினாலும், உடலுழைப்பில் இன்னமும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் பார்க்கப்படுவதில்லை என்பதே யதார்த்தம். பசி, பட்டினி, வறுமையோடு நகர்ந்துகொண்டிருந்தது வாழ்க்கை.

சாப்பிட சப்பாத்தி, தொட்டுக்கொள்ள பச்சை வெங்காயம், தண்ணீர்... இது மூன்று வேளைக்குக் கிடைத்தாலே அந்த வீட்டுக்கு அது பொன்னாள். இரவில் சாக்கை விரித்துத்தான் படுப்பார்கள். இந்தக் கஷ்டமான சூழலிலும், ஏதோ ஒரு மன உறுதியில் அந்தச் சிறுவனைப் பள்ளிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார் அவன் அம்மா.
ஒருநாள் அவன் பள்ளியிலிருந்தபோது மழை பிடித்துக்கொண்டது. வெளுத்து, வாங்கிய மழை பூமியையே புரட்டிப் போடுவதுபோலப் பெய்துகொண்டிருந்தது. அவன் வீட்டுக்குப் போகும் வழியிலிருந்த ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அதைத் தாண்டித்தான் அவனால் வீட்டுக்குப் போக முடியும். அருகிலிருந்து வந்திருந்த மாணவர்களைத் தவிர, அந்தச் சிறுவனும் வேறு சில மாணவர்களும் பள்ளியிலேயே மாட்டிக்கொண்டார்கள். அன்று இரவு அவன், தன் நண்பர்களில் ஒருவன் வீட்டில் தங்கிக்கொண்டான்.
அடுத்த நாள் மழை நின்றது. ஆற்றிலும் வெள்ளம் வடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். அந்தச் சிறுவன், அவனுடைய நண்பன் இருவரும் கிளம்பினார்கள். சிறுவனை பத்திரமாக வீட்டில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்காக நண்பனின் தந்தையும் உடன் வந்தார். சிறுவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. அவர்கள் யாருமே காலையில் எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அவர்கள் கடைத்தெருவுக்கு வந்தார்கள். ஒரு ஹோட்டலிலிருந்து விதவிதமான சிற்றுண்டிகளின் வாசனை சாலையில் கமகம’வென மணம் பரப்பிக்கொண்டிருந்தது. சிறுவன் நாக்கை சப்புகொட்டிக்கொண்டான். நண்பனின் தந்தை ஹோட்டல் வாசலில் நின்றார். அந்தச் சிறுவனை அழைத்தார்.

`இங்கே பாருப்பா... உன் வீட்லருந்து உன்னோட அம்மாவோ, அப்பாவோ உன்னைத் தேடிக்கிட்டு வந்தாலும் வருவாங்க. அப்பிடி வந்தா இந்த வழியாத்தான் வரணும். அதனால, நீ இங்கேயே நின்னு பார்த்துக்கிட்டிரு. நாங்க உள்ள போயிட்டு வந்துடுறோம்...’’
நண்பனும் அவன் தந்தையும் ஹோட்டலுக்கு நுழைவதை அந்தச் சிறுவன் வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். அவனைத் தேடிக்கொண்டு வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. சிறிது நேரம் கழித்து நண்பனும் அவன் அப்பாவும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தார்கள்.
``உங்க வீட்லருந்து யாரும் வர்ற மாதிரி தெரியலையே... சரி வா, நானே கொண்டு போய் விட்டுடுறேன்...’’ அவர் நடக்க ஆரம்பித்தார். சிறுவன் அவரையும் நண்பனையும் வேதனையோடும் பசியோடும் பின்தொடர்ந்தான்.

நாள்கள் நகர்ந்தன. வருடங்கள் ஓடின. ஆனால், அந்த நிகழ்ச்சி சிறுவனின் மனதில் ஆறாத காயமாக அழுத்தமாகப் பதிந்து போய்விட்டது. இதற்குப் பதிலுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்’ என்று அவன் அப்போதே முடிவெடுத்திருந்தான். அவனுக்கு இருந்த ஒரே வழி ஜெயித்துக் காட்டுவது. அதற்கு, பாடங்களைப் படித்துத் தேறுவது. படிப்பிலேயே மூழ்கிக் கிடந்தான். நண்பர்களின் பழைய, கிழிந்த உடைகளைத்தான் அணிந்திருப்பான். பல நேரங்களில் மாணவர்கள் வீசியெறியும் பென்சில்கள்தான் அவனுக்கு எழுதுவதற்குக் கைகொடுத்தன. படிப்பில் கில்லி’ என்ற நற்பெயர் அவனுக்குக் கைகொடுத்தது. விமானப்படையில் வேலைக்குச் சேரும் அளவுக்கு உயர்த்திவிட்டது. பத்தாண்டுகள் விமானப் படையில் பணிபுரிந்த பிறகு ஓய்வு பெற்றான்.

இப்போது அந்தச் சிறுவன் அல்ல... அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியிலிருக்கிறார். பல நாடுகளுக்குப் போய் வந்துவிட்டார். ஒரு வருடத்துக்கு ஆறு மாதங்களுக்குத்தான் வேலை. என்றாலும், வருமானம் டாலராகக் கொட்டுகிறது. அவருடைய நண்பரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அதற்காக நண்பருக்கு பெரும் தொகை ஒன்றைக் கொடுத்தார் அவர். அந்த நண்பர் வேறு யாருமல்ல... அவரை வாசலில் நிறுத்திவிட்டு, அப்பாவோடு சாப்பிடச் சென்ற அதே நண்பர். அந்தத் தொகையை மட்டும் அவர் கொடுக்காமலிருந்திருந்தால், அந்தப் பெண்ணுக்குத் திருமணமே நடந்திருக்காது. என்னைப் பொறுத்தவரை, ஒருவரைப் பழிவாங்க வாழ்க்கையில் வெற்றி பெறுவதுதான் சிறந்த வழி. அவர் இவ்வளவு உயர்ந்திருந்தாலும், தன் பூர்வீகத்தை மறக்கவில்லை. தன்னால் இயன்ற உதவியை இன்றைக்கும் அந்தக் கிராமத்துக்குச் செய்துகொண்டுதான் இருக்கிறார். அந்தக் கிராமமே அவரை மரியாதையோடு பார்க்கிறது...’’
நண்பர் சொல்லி முடித்தார். நான் அவரிடம் கேட்டேன்... யார் அந்த மனிதர்?’’
நண்பர் மெல்லிய புன்னகையோடு சொன்னார்... `என் அப்பா!’’