Ticker

6/recent/ticker-posts

ஓஷோ சொன்ன கதை, நமக்கு சொல்லும் பாடம் - படித்ததில் பிடித்தது'ஒரு கானகத்தில் காட்டாறு ஒன்று பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது..

அந்த ஆற்றின் கரையினிலே ஒரு மாமரம் ஒன்று கிளைபரப்பி நின்றிருந்தது!

அதில் அண்ணன், தம்பி என
இரண்டு கிளைகளும் இருந்தன.

அண்ணன் கிளை எப்போதும் அமைதியானது...

காற்றடித்தால் ஆடும்!

தம்பி கிளை ஆரவாரமானது..

தானாகவே ஆடிக் காற்றை வரவழைக்கும்!

ஒருநாள் பயங்கர மழை
பொழிய ஆரம்பித்தது..

கூடவே கடும்புயல் வேறு..

காட்டாற்றில் வெள்ளம்
கரைபுரண்டு ஓடியது!

பல மரங்களின் கிளைகளும்
முறிந்து விழுந்தன..

அண்ணன் கிளை வழக்கம் போல்,
நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தபடி, புயலில் ஆடிக்கொண்டிருந்தது.

தம்பி கிளையோ,
‘என்னண்ணே, இது..
நாசமாப் போற காத்து..இப்படி அடிக்குது”, என்று புலம்பிக் கொண்டிருந்தது.

அடுத்து காற்று கொஞ்சம்
சுழித்து அடித்ததில்

தம்பி கிளை முறிந்து விழுந்தது.. கூடவே அண்ணன் கிளையும் முறிந்து விழுந்தது.

இருவருமே ஆற்றில் விழுந்தார்கள்!

தம்பி கிளை கத்த ஆரம்பித்தது..

“என்னய்யா அநியாயம் இது.. நான்பாட்டுக்கு சிவனேன்னு தானே மரத்துல இருந்தேன்..
இப்படி ஆத்தோட அடிச்சுக்கிட்டுப் போறானே..
அய்யய்யோ” என்று அழுதது.

அண்ணன் கிளை “தண்ணி நல்லா ஜில்லுன்னு இருக்குல்ல” என்றது.

தம்பி கிளை கடுப்பாகி விட்டது

“ச்சீ..நீயெல்லாம் ஒரு கிளையா...???
இங்க உசுரே போகுதுங்கிறேன் ஜில்லுன்னு இருக்குன்னு லொள்ளு பண்றே.. அய்யய்யோ..... தூக்கித் தூக்கிப் போடுதே” என்றது.

அண்ணன் கிளையோ...

“தம்பி, இதை மனிதர்கள் கண்காட்சியில் காசு கொடுத்து அனுபவிக்கிறார்கள்.
நமக்கோ இலவசமாகக் கிடைச்சிருக்கு.
சொய்ங்..சொய்ங்னு போறது சூப்பரா இருக்கில்ல..???” என்றது.

‘இனியும் இவன் கூடப் பேசக் கூடாது’ என்று முடிவு செய்த தம்பி கிளை,

ஆண்டவனில் ஆரம்பித்து அனைத்தையும் திட்டித் தீர்த்தது..

"எவ்வளவு சொகுசா மரத்துல இருந்தேன்.. இப்படி பாறையிலயும் கரையிலயும் முட்டி மோதும்படி ஆயிடுச்சே", என்று புலம்பித் தள்ளியது..

அண்ணன் ஆற்று நீரோட்டத்தில் விளையாடியபடியே போய்க் கொண்டிருந்தது

கடைசியில் இரு கிளைகளும்
கடலை நெருங்கின..

தம்பி கிளை பதறியது..

“அண்ணே, நம்ம கதை முடிஞ்சுச்சு..
இந்த நல்ல தண்ணில கரை ஒதுங்குனாக் கூட வேர் பிடிச்சு வளர வாய்ப்பிருக்கு..
அங்கே கடலுக்குள்ள போனா கன்ஃபார்மா சாவு தான்” என்றது..

“ஆமாம் தம்பி. அது எனக்குத் தெரியுமே”என்றது அண்ணன் கிளை.

“தெரியுமா...???
அது தெரிஞ்சா சந்தோசமா வந்தே..???”

“ஆமா, எல்லா ஆறுகளும் கடலையே சேருகின்றன என்று சொல்லியிருக்காங்க தம்பி..

அதனால் எப்படியும் நம்ம கதை முடியப் போகுதுன்னு ஆத்துல விழுந்த உடனேயே தெரிஞ்சு போச்சு..

இது நம்மால கட்டுப்படுத்த
முடியாத காட்டாத்து வெள்ளம்..

அப்போ நமக்கிருந்தது
ரெண்டே சாய்ஸ் தான்

ஒன்னு அதை அமைதியா ஏத்துகிட்டு

அந்தக் கஷ்டத்தையே எஞ்சாய் பண்றது

இன்னொன்னு அதை எதிர்த்துக்கிட்டு டென்சன் ஆகி சாகறது..

நான் முதல் சாய்ஸை எடுத்தேன்

நீ இரண்டாவதை எடுத்தாய்..

ரெண்டு பேருக்கும் ஒரே முடிவு

ஆனாலும் நான் சந்தோசமா
சாவை நோக்கி வந்தேன்

நீ அழுதுக் கிட்டே வந்தே..

இங்க முடிவும், ஆரம்பமும் நம்ம கையில் இல்லை

இடைப்பட்ட பயணம்....

அதுல நல்ல சாய்ஸ்-ஐ நாம தான் எடுத்துக்கணும்”

தம்பி “நீ சொல்றது சரி தான்ணே..
நான் வேஸ்ட் ஆக்கிட்டேன்”ன்னு சொல்லும் போதே கடல் வந்து விட்டது

இரு கிளைகளும்
கடலில் சங்கமித்தன...