Header Ads Widget

பழையன கழிந்து - கிராத்தூரான் கவிதை



பழையன கழிதலும் புதியன புகுதலும்
உழுதவர் உண்டவர் வாழ்வினில் இருந்தது
நடந்ததை மறக்கவும் நடப்பவை சிறக்கவும்
வேண்டியிவ் வழக்கமும் விமரிசையாய் நடந்தது.

காலங்கள் கடந்ததும் காரணம் மறந்தது
எதற்கென்று சொல்லாமல் விடுவதன் பலனது
இவனுக்கு இதையெல்லாம் சொல்வது எதற்கென்று
நினைத்தவர் அகந்தையால் நிகழ்காலம் தவித்தது.

ஆடியிலும், போகியிலும் வேண்டாததை அழித்ததும்
புரியாத சுவடிகளைத் தேடித்தேடி எரித்ததும்
தமிழன்னை அதுகண்டு கண்ணீரை வடித்ததும்
காலங்கள் கண்முன்னே பாடமாய்க் கொடுத்தது.

மாற்றங்கள் பெரிதாக எதுவுமில்லை இப்போதும்
அழிப்பதற்கு எரித்தவர்கள் அழிவதற்கு எரிக்கிறார்கள்
தவறாகச் செய்தது தப்பாகத் தொடர்கிறது
தெரிந்தே தனக்குத் தண்டனை தருகிறது.

கவலைகளை அழிப்போம், காயங்களைத் தவிர்ப்போம்
நியாயத்தை அழைப்போம் அநியாயம் எதிர்ப்போம்
நல்லதெனில் நினைப்போம் இல்லையெனில் மறப்போம்
உள்ளுக்குள் உற்றுநோக்கி புதுப்பித்து மகிழ்வோம்.

புதியவராய் உயர்வோம்.

*கிராத்தூரான்*