பாலைவனம்-. வத்சலா கவிதை

அலைகள் அற்ற மணல் கடல்!
எல்லைகளைத்தாண்டிய படல்!
மருதமும் நெய்தலும் என்றோ
மயங்கிதிரிந்ததால் பிறந்த திடல்!
சூரியோதயம் தெரிந்தால் கிழக்கு! 
சந்திரோதயம் தெரிந்தால் மேற்கு! பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும்
பலநாள் உண்டு இங்கே வழக்கு!
காய்ந்து உருளும் புல்லின்பூக்கள்
காயத்தின் முடிவுரைக்கான சாட்சிகள்!
காற்றைமட்டும் தத்தெடுத்ததால் அது
போடும் அலைக்கற்றை மணலும்
பாடும் மௌனத்தில் சங்கீதம்!
வளைவுகளாய் ,சரிவுகளாய்,
முகடுகளாய் ,குன்றுகளாய்,
மணல்கொண்டு காற்று வரைந்த
மனந்தின்னும் ஓவியங்கள்!
பகலில் கடும் வெயில் காவலுக்கு!
இரவில் கொடும் குளிர் ஏவலுக்கு!
இருந்தபோதும் தனிமையில் இருந்ததில்லை பாலைவனம்!
மணலில் தோண்டிய ஆழ்ச்சுரங்க
வழிதேர்ந்து நீர் தேடும் மரவேர்கள்!
இலையுதிர்த்து முட்களால்
ஆடைபோர்த்து தாளுண்ட நீரைத்
தாரைவார்க்காது ஆயுள் காக்கும்
கன்னிகளாய்ச் சில கள்ளிகள்!
வியர்வை சிந்தாது சேர்த்து வைத்து
விசமாக்கி இரைதேடும் அரவங்கள்!
அவைக்கும் உணவாகும்
சிற்றுயிர்கள் என ஒரு....
உணவுச்சங்கிலி சத்தமின்றி இங்கே
உழன்று கொண்டிருப்பதாலேயே
மண்தொடாத மழைநீரும்....
மனதார வாழவைத்துக்கொண்டிருக்கும்
பேரீச்சை வனம் சூழ்ந்த சிற்சில
பாலைவனச்சோலைகளையும்....
மணற்கடலில் நகரும் கப்பல்களையும்!

🌹🌹வத்சலா🌹🌹