செரிமானத்தை எளிதாக்கும் உணவுகள்..



நம் உடல், உணவைச் செரிக்க எடுத்துக் கொள்ள, எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமாகும் போது, பல்வேறு உடல் உபாதைகளும் உண்டாகின்றன. சில இயற்கை உணவுகளை நாம் சாப்பிடும் உணவோடு சேர்த்துக் கொண்டாலே போதும், இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட்டுவிடலாம்.

புதினா...

புதினா, வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள ஸ்பிங்டர் சதையை (Sphincter Muscle) ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் சாப்பிட்டவுடன் மலம்கழிக்கத் தூண்டும் 'இரிட்டபுள் பௌல் சிண்ட்ரோம்' - (IBS) தடுக்கப்படுகிறது.

மலக்குடலில் அமைந்திருப்பது 'TRPM8' என்னும் புரோட்டீன். இது, காரசாரமான மசாலா உணவுகளை உண்டு, அவை செரிமானமாகி, மலக்குடலில் பயணிக்கும் போது ஏற்படும் வலி மற்றும் எரிச்சலைப் போக்க உதவும். மசாலா உணவுக் கழிவுகள் மலக்குடலில் பயணிக்கும் போது இயல்பாகவே TRPM8, தனது வேலையைத் தொடங்கிவிடும்.

√ புதினாவை உணவில் சேர்ப்பதால், இது தூண்டப்படும். இதனால் வாயுபிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.​​​​​​​ 

√ குடல் தசைகளை மிருதுவாக்க புதினா உதவுவதுடன் வாய் துர்நாற்றத்தை நீக்கும், வாய் குமட்டுதலை குணமாக்கும். சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா தேநீர் பருகலாம்.

√ எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து அதோடு புதினாவும் சேர்த்துக் குடிப்பதால் வயிறு இலகுவாகி செரிமானம் தூண்டப்படும். 

லவங்கம் (கிராம்பு)...

லவங்கத்தில் உள்ள மருத்துவப் பலன்கள் குறிப்பாக, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள் செரிமானத்துக்கு உதவுகின்றன.   

√ லவங்கம், செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் வாயுப்பிடிப்பு, வயிற்று உப்புசம், குமட்டல் உணர்வு (Nausea) நீங்கும். செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கும். 

√ ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சூடாகக் குடித்தால் செரிமானம் சீராகி , வயிற்றுப் பிரச்னைகளும் இருக்காது. 

√ கிராம்பை வாயில் வைத்து மென்று உண்ணலாம். கிராம்பு டீ அருந்தலாம். 

ஒமம்...

ஓமத்தில் உள்ள தைமோல் (Thymol) பீனால், செரிமான நொதிகள் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. 

√ அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அது அரை டம்ளராக ஆகும் வரை சூடாக்கி, தினமும் காலை, மாலை பருகிவந்தால், வயிற்று மந்தம், அசிடிட்டி, செரிமானாக் கோளாறு ஆகியவற்றைப் போக்கும் 

இலவங்கப்பட்டை...

செரிமான பாதையில் ஏதேனும் கோளாறு இருப்பின் அதைச் சரி செய்து உணவு செரிமானத்தைச் சுலபமாக்கிவிடும். இதற்கு உங்கள் உணவில் பட்டை சேர்த்துக் கொள்ளலாம், இதில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த இலவங்கப்பட்டை உதவும். இதனை அப்படியே சாப்பிடலாம்.

√ சிறு பட்டையை வாயில் வைத்து மிட்டாய் போல் மெதுவாக மென்று சாற்றை விழுங்கலாம். பட்டையில் டீ போட்டுக் குடிக்கலாம் அல்லது பட்டைப் பொடியை தேநீரில் கலந்து நாளுக்கு 2-3 முறை அருந்தலாம்.

சீரகம்...

இரும்பு, கால்சியம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ள மூலிகை சீரகம். மசாலா உணவுகள், பிரியாணி, அசைவ ரெசிபிக்களில் சுவை, மணம் கூட்டவும், செரிமானத்தை எளிதாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 

√ இரைப்பை அலர்ஜியை குணமாக்குகிறது.

√ நுண்தொற்றுக்களிடம் இருந்து இரைப்பையின் உட்பகுதியைப் பாதுகாக்கிறது. 

√ நாள்பட்ட செரிமானக் கோளாறால், மலக்குடலில் ஏற்படும் இரத்தக்குழாய் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது. 

வெந்தயம்...

இதில் வைட்டமின்கள் ஏ, சி, கே, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. 

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால், நாம் சாப்பிடும் அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. 

√ வெந்தையத்தை அப்படியே சாப்பிடுவதை விட, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.     

ஏலக்காய்...

உணவு உண்டவுடன் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொண்டு மென்று விழுங்கினால் அஜீரணம் இருக்காது. வயிறு இலகுவாகும். 

சமையல் சோடா...

வயிற்று அமிலத்தை சமன் செய்ய சமையல் சோடா உதவும். அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு நிவாரணம் தரும். நாளுக்கு ஒருமுறை ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் சோடாவை தண்ணீர் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம்.

சோம்பு...

பொதுவாக உணவகங்களிலும் சோம்பு கொடுக்கப்படுவதற்குக் காரணம் அதன் செரிமானத்திற்காகத் தான். இரைப்பை நீர் சுரக்க பெருஞ்சீரகம் உதவுவதால் அஜீரணம் ஏற்படாது. 

√ செரிமான பிரச்னை இருந்தாலோ அல்லது அதிகமாக உண்டு விட்டாலோ உடனே ஒரு ஸ்பூன் சோம்புவை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது சோம்புப் பொடியை  நீருடன் கலந்து அருந்தலாம்.


செரிமானத்தை எளிதாக்கும்  உணவுகள் தொடர்ச்சி...

இஞ்சி...

நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள், செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில் (Saliva), செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile). இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும். 

√ உணவுடன் இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இஞ்சி தேநீர் அருந்தலாம். இஞ்சியில் ஆண்டி ஆக்சிடண்ட் இருப்பதால் அஜீரணத்தை குணப்படுத்த உதவும். இஞ்சியில் வலி மற்றும் அழற்சியை குணப்படுத்தும் தன்மை உள்ளது.

√ இஞ்சி, ஜிஞ்சரால் (Gingerol) என்னும் எண்ணெய் கொண்டது. இது, வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும் போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக் குழாயில் தேங்கவிடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்றுகிறது. 

√ இஞ்சிச் சாறு கலந்த வெந்நீரை தினமும் காலை மாலை இருவேளையும் குடிக்கலாம். 

√ சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் செரிமானம் எளிதாகும். 

கிரீன் டீ...

காலகாலமாக கிரீன் டீ, உடல்பருமனைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பானமாக விளங்குகிறது. 

* கிரீன் டீயில் உள்ள பாலிபீனால் என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட் கொழுப்பை ஆக்ஸிடைஸ் செய்கிறது. உடற்பயிற்சி செய்யும்போது, நம் உடலில் இதே செயல் தான் நடைபெறுகிறது. 

* தவிர இன்சுலின் சுரப்பை அதிகரித்து, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

√ சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், 50 மி.லி கிரீன் டீ அருந்துவதால், செரிமானம் எளிதாகும். எனவே, ஒரு நாளைக்கு 100 மில்லி மட்டும் அருந்துவது நல்லது. காலை மாலை இருவேளையும் ஒரு கப் அருந்தலாம்.  

எலுமிச்சை...

சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும்.

நெல்லிக்காய்...

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வர அஜீரண கோளாறு நீங்கும்.

தேன்...

பாக்டீரியாக்கள் உற்பத்தியை தடுப்பதன் மூலம் அஜீரணத்தை குணப்படுத்த தேன் உதவும். தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம்.

வெந்நீர்...

சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான தண்ணீர் பருகுவதால், உணவில் கலந்துள்ள எண்ணெய் இறுகுகிறது. இதனால் செரிமானம் தாமதப்படுகிறது. இதனைத் தவிர்த்து விட்டு, சாப்பிட்டவுடன், சிறிதளவு மிதமான சூடுள்ள நீர் பருகினால், உணவுப் பொருட்கள் எளிதில் உடையும். 

√ கடினமான அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது வெந்நீர். 

√ இரவு உணவுக்குப் பின்னர், வெந்நீர் பருகுவதால், சிறு மற்றும் பெருங்குடல் செயல்பாடு தூண்டப்படுகிறது. அதனால், மலம் இளகி, மலச்சிக்கல் நீங்கும். வயிற்று வலி, உப்புசத்தைத் தடுக்கும். 

*அன்றாட உணவு முறைகள்...*

* ஆரோக்கியமான உடலுக்கு இரு நேர சிற்றுண்டியும், ஒரு வேளை பேருண்டியும் போதுமானது. இரு சிற்றுண்டிகளில் ஒரு வேளை (இரவு அல்லது காலை) பழ உணவும் இயற்கையில் விளைந்த சமைக்காத உணவும் இருப்பது சிறப்பு.  

* காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தைக் குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம். 

√ அவல் பொங்கல் அல்லது உப்புமா, கைக்குத்தல் புழுங்கல் அரிசிக் கஞ்சி, சிறு குழந்தைகளாக இருந்தால் நவதானிய / சிறு தானிய / பயறு நிறைந்த கஞ்சி நல்லவை. 

√ வளரும் குழந்தைக்கு ஒரு வாழைப்பழத்துடன் இட்லி அல்லது தானியக் கஞ்சி கொடுக்கலாம். 

√ இளைஞர்கள் பழத்துண்டுகளுடன் அவல் பொங்கல் அல்லது வெண்பொங்கல் சாப்பிடலாம். 

√ பெரியவர்கள் சிவப்பரிசி அவலுடன், பப்பாளித் துண்டுகள், இளம் பழுப்பில் உள்ள கொய்யா இவற்றுடன் புழுங்கல் அரிசி உணவு அல்லது கேழ்வரகு உணவு சாப்பிடலாம். ஜீரணத்தை சீராக்கும்.

* மதிய உணவில் நிறையக் காய்கறிகள், கீரைக் கூட்டு / கடைசல் இவற்றுடன் அரிசி உணவை அளவாகச் சாப்பிட வேண்டும். 

* அதிகக் காரத்தைத் தவிர்க்கவும். காய்ந்த மிளகாய் பயன்படுத்த வேண்டிய உணவுகளில், அதற்குப் பதிலாக மிளகைப் பயன்படுத்த வேண்டும். 

* ஜீரணத்தை எளிதாக்க, எண்ணெயில் பொரித்த உணவைத் தவிர்ப்பது நல்லது. 

* சரியான நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டுவிட வேண்டும். 

* அவசியமின்றி வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. 

* எப்போதும் டென்ஷனுடன் இருப்பவர்களுக்கு ஜீரணக் கோளாறு வந்துவிடும். மனதை லகுவாக வைத்திருக்கவும். 

* புகை, மது இரண்டும் கேன்ஸரை வயிற்றுப்புண் வழியாக அழைத்து வருபவை. இரண்டையும் தவிர்க்கவும். 

* காலை உணவில் இட்லிக்கு பிரண்டைத் துவையல் நல்லது. 

* துவரம்பருப்பு சாம்பாருக்கு பதிலாக பாசிப்பருப்பு சாம்பார் செய்து சாப்பிடலாம். 

* வெள்ளைக் கொண்டைக் கடலைக்குப் பதில், சிறு சிவப்புக் கொண்டைக்கடலை பயன்படுத்தலாம். அதுவும்கூட குறைந்த அளவில், மிளகு சீரகம் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.

* காலை 11 மணிக்கு நீர் மோர் இரண்டு டம்ளர் அருந்தலாம்.

* மதிய உணவில் காரமில்லாத, பாசிப் பயறு சேர்த்த கீரைக் குழம்பு, தேங்காய்ப் பால் குழம்பு (சொதி), மிளகு-சீரக ரசம், மணத்தக்காளி கீரை என சாப்பிடவும். சாப்பிட்டு முடித்ததும் இரண்டு குவளை சீரகத் தண்ணீர் அருந்துவது ஜீரணத்தை எளிதாக்கும். 

* இரவில் வாழைப்பழம், ஆவியில் வேகவைத்த அல்லது சமைக்காத இயற்கை உணவு சாப்பிடவும்.

* கொத்தவரை, காராமணி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளைத் தவிர்க்கவும். அதிக அளவிலான மாம்பழமும் பலாப்பழமும்கூட வாயுவை உண்டாக்கும். 

* சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சம பங்கு, உப்பு பாதிப் பங்கு சேர்த்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்புப் பொடிபோல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. 

√ சாப்பிட்டதும் வயிற்று உப்புசம் வருபவர்களுக்கு இந்த அன்னப்பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, மோருடன் சாப்பிடக் கொடுக்க வேண்டும். உடனடியாக வாயு விலகி, வயிற்று உப்புசம் நீங்கும். 

* சித்த மருத்துவரிடம் கிடைக்கும் ஜீரண சஞ்சீவி, சீரக விவாதி மருந்துகள் அஜீரணத்தை அகற்ற உதவுபவை. 

* தினமும் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.

*அடுப்பங்கரை மருந்தகம்...*

*அடுப்பங்கரையில் கொஞ்சம் அக்கறை காட்டினால் அஜீரணத்தை வெல்லலாம்...*

√ கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். 

√ வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜீரணக் கோளாறு சரியாகும்.

√ சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜீரணமாவதோடு, உடல் குளிர்ச்சியடையும்.

√ 1 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

√ ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். 

√ சிறிது சுக்குடன் கருப்பட்டி, 4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜீரணம் குணமாகி பசி ஏற்படும்.

√ புதினாவை நெய்விட்டு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் பசி அதிகரிக்கும்.

*உண்டதும் படுக்காதீர்கள்...*

சாப்பிட்டவுடன் படுக்கும் போது அமிலங்களானது எதிர்வினையாக மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், உணவு எடுத்துக் கொண்டு வருவது போன்ற உபாதைகள் ஏற்படும். 

சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து படுப்பது உத்தமம்.

*முக்கிய எச்சரிக்கை...*

சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன் கூடிய வலி, மாரை அடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால் வந்த நெஞ்செரிச்சலாக இருக்கலாம். 

ஜீரணம் என்பது, உமிழ்நீரில் ஆரம்பித்து மலக்குடல் வரை நடக்கிற செயல்பாடு. இலையில் பிடித்த பதார்த்தத்தைப் பார்த்ததும், உமிழ்நீர் சுரப்பதில் ஆரம்பிக்கும் ஜீரணம் சரியாக நடைபெற, பல சுரப்புகள், நுண்ணுயிரிகள் என ஏராளமான விஷயங்கள் சரியாக நடைபெற வேண்டும். நினைத்தபோது, நினைத்தபடி, நினைத்தவற்றைச் சாப்பிடுவதுதான் மொத்த ஜீரண நிகழ்வுகளும் தடம்புரளக் காரணங்கள். 

அஜீரணத்தை அலட்சியம் செய்யக் கூடாது. ஆரம்பநிலையிலேயே அதற்குத் தகுந்த சிகிச்சையைப் பெற்று விட வேண்டும். ஏனென்றால் இது பல நேரங்களில் வயிற்றில் உள்ள உள்ளுறுப்பு நோய்களின் ஆரம்ப நோய்க்காட்டியாகத் தோன்றும். 

செரிமானக் கோளாறுகள் பல்வேறு நோய்களுக்கு வழிவகுப்பவை என்பதை கவனத்தில் கொள்வோம்.