கருவாடு சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

கருவாடு சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், தோல் நோயாளிகள், செரிமானச்சிக்கல் மிக்க நோயாளிகள், கடும் நீரிழிவு நோயாளிகள், அமிலத்தன்மை உடலில் அதிகமுள்ள நோயாளிகள் தவிர, மற்றவர்கள் கருவாடு உட்கொள்வது நன்மையே தரும்.

இந்த கருவாடுகளிலும், வரால், குறவை, திருக்கை, தேளி, அயிரை, சன்னை, சுறா, மசரை, கிழங்கான், நெய்தோலி, ஆகிய மீன்களின் கருவாடுகள் சிறந்த பலன்களைத் தருபவை. சாதாரண உடல்நலிவுகளின்போது கூட , இவற்றை உட்கொள்ளலாம். மருந்தின் வீரியத்தையும், பலனையும் முறிக்காத பத்தியக்கருவாடுகள் இவையாகும்.

வாளை, இறால், விலாங்கு, பருங்கெண்டை, சேற்கெண்டை, சன்னக்கூனி, ஆகிய மீன்களின் கருவாடுகளைத் தவிர்ப்பது நல்லதென்று, சித்தமருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

இனி, சிலவகை கருவாடுகளின் மருத்துவப் பலன்கள், பாதகங்கள் பற்றி பார்ப்போம்.

1.கொடுவா கருவாடு: கொடுவாமீனை விட கொடுவா கருவாடு, சத்துக்கள் செறிந்தது. இதை, கொடுவாமீனுடன் ஒப்பிடும்போது, புரதச்சத்து 4 மடங்கும், தாதுப்புக்களின் செறிவு 10 மடங்கும், இரும்புச்சத்து 5 மடங்கும், சுண்ணாம்புச்சத்து 2 மடங்கும் அதிகமுள்ளது. இக்கருவாட்டை உட்கொள்வதன் மூலம் , உடல்பலவீனம், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, இரத்த சோகை, உடல்மெலிவு, உள்ளிட்ட பல வகையான உடல் சிக்கல்களிலிருந்து எளிதாக மீளமுடியும்.

100கிராம் கொடுவா கருவாடு, 266 கலோரி ஆற்றலை நமதுடலுக்கு அளிக்கிறது. 100கிராம் கொடுவா மீன், நமதுடலுக்கு 79 கலோரி ஆற்றலை மட்டுமே அளிப்பது குறிப்பிடத்தக்கது.

2. உப்பங் கெளுத்திக்கருவாடு: உப்பங் கெளுத்தி மீனை விட, கெளுத்திக் கருவாட்டிலேயே, சத்துக்கள் மிகுந்துள்ளன. 100கிராம் உப்பங்கெளுத்திக் கருவாடு, 255 கலோரி ஆற்றலை நமதுடலுக்கு அளிக்கிறது. கொடுவாமீன் கருவாட்டிலுள்ள பலன்களை இக்கருவாடும் தர வல்லது.

3.கச்சற் கருவாடு: ஏரி, ஆறு முதலிய நல்ல நீர்நிலைகளில் வாழும், சன்னக்கெண்டை மீனை மட்டும் பிடித்து உலர்த்திய கருவாடே, கச்சற் கருவாடாகும். தற்போது, நல்லநீர் நிலைகளில் வாழும், பலவகை சிறுமீன்களையும் உலர்த்தி, "கச்சற் கருவாடு" என்று விற்பனை செய்து, மக்களை ஏமாற்றுகின்றனர். இப்போலிகளுக்கு, கச்சற் கருவாட்டின் மருத்துவப் பலன்கள் கிடையாது.

கச்சற் கருவாடு உட்கொள்வதன் மூலம் வாயு, சளி ஆகியனவும், அவை சார்ந்த இதர உடற்பிணிகளும் குணமாகும்; உடல் அரிப்பைப் போக்கும்; பசியின்மையை நீக்கும்; சீரண சக்தியை அதிகரிக்கும்; சிலவகை காய்ச்சல்களை நீக்கும். இதிலுள்ள பெரிய குறைபாடு, பித்தத்தை அதிகரிக்கும் என்பதுதான். இதை உட்கொண்ட இருமணிநேரம் கழித்து, உயர்தர ஓமதிரவம் அல்லது சுக்குகாபி பருகுவதன் மூலம், பித்த அதிகரிப்பைச் சீரமைத்துக்கொள்ளலாம்.

4. சீலாக் கருவாடு: சீலா மீனை விட(100கிராமில் 92 கலோரி ) , சீலா கருவாடு (100 கிராமில் 210 கலோரி) , உடலுக்கு அதிக ஆற்றலைத் தரக்கூடியது. கொடுவா, உப்பங்கெளுத்திக் கருவாடுகளுக்குரிய மருத்துவப் பலன்களையே இதுவும் கொண்டுள்ளது. சுவையில், வஞ்சிரமீன் கருவாட்டை நிகர்த்ததாக இது இருக்கும்.

5.இறால் கருவாடு: உடலுக்குப் பலமும், தாது விருத்தியும் கொடுக்கும்; இரத்த விருத்திக்கும், கலவிஇச்சை விருத்திக்கும் வழிவகுக்கும். அதே சமயம், வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறுஉப்புசம், உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

6.கொள்ளிக்கருவாடு: கோலாமீன் கருவாடே, "கொள்ளிக்கருவாடு" எனவும் அழைக்கப்படுகிறது. கொள்ளிக் கருவாட்டிற்குச் சளியை நீக்கும் தன்மையுண்டு என்றாலும், கரப்பான், சொறி, சிரங்கு, ஒவ்வாமை, உடல் பொலிவுச் சீர்குலைவு உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, இதை அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

7. சுறா கருவாடு: சிலவகை வயிற்றுவலி, சிலவகை பேதி, முதலியவற்றைக் குணமாக்கும். பசியை நன்கு தூண்டும். குடல் பூச்சிகளை அகற்றும். வாத, கப நோய்களைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக, பால்சுறாக் கருவாடு, சுறா கருவாடு வகைகளில் மிகச் சிறந்ததாகும். தாய்ப்பால் பெருக்கத்திற்கும், மாதவிலக்கு பலவீனச் சீரமைப்பிற்கும், உடல் தேற்றத்திற்கும் இது பெரிதும் உதவும். பிரசவித்த பெண்களுக்கு, இதைச் சமைத்துத்தரும் பழக்கம், இன்றளவும் உள்ளது.

8.திருக்கைமீன் கருவாடு: சுறாக் கருவாட்டிற்குள்ள அத்தனை மருத்துவப் பலன்களும் இதற்கும் உண்டு.

9. உல்லமீன் கருவாடு: அடிக்கடி, இந்த கருவாட்டை உண்டுவந்தால், சிரங்கு, பேதி, அரிப்பு, தடிப்பு உள்ளிட்ட நோய்களுண்டாகும்.

10.கிழங்கான் கருவாடு: இக்கருவாடு, செரிமானத் திறனை அதிகரிக்கும்; பசியைத் தூண்டும்; மலச்சிக்கல் போக்கும்; உடலுக்கு நல்ல ஊட்டமும், செழுமையும் தரும்.

11. கொக்குமீன் கருவாடு: சளி தொடர்பான நோய்களை நீக்கும். குறிப்பாக, கக்குவான் இருமலை நீக்கப் பெரிதும் உதவும்.

12. வரால் கருவாடு: உடலுக்கு வலுதரும்; உடல் நோய்களைப் போக்கும்; செரிமானத் திறனை அதிகரிக்கும்; நோய் எதிர்ப்பாற்றல் பெருக்கும்.

13. ஆற்று ஆரால்மீன் கருவாடு: மலக்கட்டு, சிறுநீர்க்கட்டு, உடல்வலிகளைப் போக்கவல்ல இக்கருவாடு, கபநோய்கள், கரப்பான், பசிமந்தம், அதிக உமிழ்நீர்ச்சுரப்பு முதலான நோய்களை உண்டாக்கும்.கடல் ஆரால்மீன் கருவாட்டில், இத்தகைய பாதிப்புகள், குறைவாகவே உள்ளன.

14. குறவை கருவாடு: வரால் கருவாட்டின் சுவையுடையது. காசநோயைக் கட்டுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பைப் பெருக்கும். குடல்வாயுவை நீக்கும்.அளவுக்கதிகமாக உட்கொண்டால், மலச்சிக்கலை உண்டாக்கும்.

15.கறுப்பு வௌவால் மீன் கருவாடு : விந்துச் சுரப்பு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். அதிகமாக உட்கொண்டால், கரப்பான், நீரிழிவு, அதிக சிறுநீர், சொறி, சிரங்கு முதலான நோய்களை உண்டாக்கும்.

16. கெண்டைக் கருவாடு: குடல்வாதம், வயிற்றுவலி உள்ளிட்ட வயிற்று நோய்கள், நீரிழிவு, புண், சிரங்கு உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும்.

17. மசரை (எ) மயறி கருவாடு: அடிக்கடி ஏற்படும் சோர்வு, மயக்கம், ஒருசில வயிற்றுநோய்கள், கபம்வாதம்பித்தம் மிகுதிப்பாடு உள்ளிட்ட பல நோய்களைக் குணமாக்கும்.

18.ஓலைவாளைக் கருவாடு: பித்த, வாத நோய்களைக் குணமாக்க உதவக்கூடியது. பசியை அதிகரிக்கும்.செரிமானத்திறனை மேம்படுத்தும்.