வாழ்வில் வெற்றிபெற அவமானப்படுங்கள் - புத்தரின் விளக்கம்



அவமானங்கள்


உறுதியான மனம் இருந்தால் அவமானங்கள் வரும் போது மனதின் கதவை இறுக அடைத்துத் தாழ் போட்டுக் கொள்ளலாம்.

நாம் அனுமதிக்காவிடில் அவமானங்கள் நமக்குள் போய் அமர்வதேயில்லை.
பிறர் அவமானமான வார்த்தைகளைப் பேசும் போது அதை வரவேற்று உள்ளே உட்கார வைத்து அதையே நினைத்து உருகி, நமது வாழ்க்கையை இழந்து விடக் கூடாது.

புத்தர் ஒருமுறை கிராமங்கள் வழியாகப் போய்க் கொண்டு இருந்தார். ஒரு கிராமத்தில் அவருக்கு ஏகப்பட்ட மரியாதை. அடுத்தக் கிராமத்தில் ஏகப்பட்ட திட்டு, வசைமொழி, அவமானப்படுத்தல்கள்.

புத்தரோ அமைதியாய் இருந்தார்.

அவமானப் படுத்தியவர்களுக்கே அவமானமாகி விட்டது.“யோவ்.. இவ்ளோ திட்டறோமே.. சூடு சொரணை ஏதும் இல்லையா ?” என்று கடைசியில் கேட்டே விட்டார்கள். புத்தர் சிரித்தார்.

“இதுக்கு முன்னால் நான் போன கிராமத்தில் ஏகப்பட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். எனக்கு எதுவுமே தேவையில்லை எனத் திருப்பிக் கொடுத்து விட்டேன்.

இங்கே ஏகப்பட்ட வசை மொழிகள் தருகிறீர்கள். இதையும் நான் கொண்டு போகப் போவதில்லை. இங்கே தான் தந்து விட்டுப் போகப் போகிறேன்.

எனவே என்னை எதுவும் பாதிக்காது” என்றாராம்.

நம் மனது முடிவெடுக்காவிட்டால், யாரும் நம்மைக் காயப்படுத்த முடியாது எனும் உளவியல் உண்மையைத் தான் புத்தர் தனது வாழ்க்கையின் அனுபவம் வாயிலாக விளக்குகிறார்.

அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதன் வடிவமல்ல நாம். நாம் எப்படி என்பது நமக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும்.

மற்றவர்களுக்குத் தெரிந்தது நம்மில் ஒரு சிறு பகுதி மட்டுமே. விமர்சனங்கள், அவமானங்களெல்லாம் எழாமல் இருக்காது.

ஆனால் அதை தூரத்தில் நின்று பார்த்து விடும் ஒரு பயணியைப் போல நாம் கடந்து சென்று விட வேண்டும்.

ஆம்.,நண்பர்களே..,

வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள். அவமானத்திற்கு அஞ்சாதீர்கள்.

அவமானம் ஒரு உரம், கடுமையான உரம், காரமான உரம். அதனாலென்ன உரம் தானே..